உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட நல்லிவீரன்பட்டியில் கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த நிலையில் பகல் 11.30 மணியளவில் அங்கு குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கோவில் திருவிழாவில் தான் குண்டு வெடித்து விட்டதோ என அச்சம் நிலவியது.
மேலும் அந்தப்பகுதியில் கரும்புகைமூட்டம் காணப்பட்டதால் என்ன நடந்தது என முதலில் யாருக்கும் தெரியவில்லை. உசிலம்பட்டி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் கோவில் திருவிழாவில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என தெரிய வந்தது. கோவில் அருகே வசிக்கும் காத்தம்மாள் என்பவரது வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டதும் அப்போது வெடிவிபத்து ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
வெடிவிபத்து ஏற்பட்டதில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பெண்ணும் 6 மாத குழந்தையும் காயமடைந்து கிடப்பது தெரிய வந்தது. அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியை தீவிரமாக ஆய்வு செய்தபோது மனித உடல் பாகங்கள் சிதறி கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பாகங்கள் மூலம் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆண் ஒருவர் உடல் சிதறி பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. பட்டாசு தயாரிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் காத்தம்மாள் வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்த பிறகே பலியானவர் குறித்து உறுதியாக தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
வெடிவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.