பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 55). விவசாயி. இவரது மகன் ரஞ்சித் (30). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டை கல்லால் தாக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே போல் ரஞ்சித் மீது 7 வழக்குகள் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி ரஞ்சித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது மகன் சிறையில் அடைக்கப்பட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வைரமுத்து தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.