அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இரும்பு வியாபாரி. இவர் தனது மகன் கங்காதரன் (34), மருமகள், குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை முதலே கங்காதரன் பலமுறை மதுபானக்கடைக்கு சென்று மது குடித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த கங்காதரன் தந்தையிடம் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். போதை அதிகரித்ததும் தந்தை, மனைவி ஆகியோரை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கங்காதரன் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கங்காதரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.