திருச்சி:
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இன்று மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில நிர்வாகி மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துச்சாமி, பிரேம் குமார் உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து பெண்களின் திருமண வயதை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, இருபதாம் நூற்றாண்டில் 15 முதல் 16 வயதுகளில் பருவமடைந்த பெண்கள், 21 ம் நூற்றாண்டில் மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் 10 முதல் 13 வயதிற்குள் பருவம் அடைந்து வருகின்றனர் .
பதினோரு ஆண்டுகள் வீட்டில் அந்தப் பெண்களைப் பாதுகாப்பது பெற்றோருக்கு மன உளைச்சலை கொடுக்கும். மேலும் திருமண வயதை கூட்டுவதால் சமூகம் அந்தப் பெண்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடும். இதனால் காவல்துறை இடமும், நீதிமன்றங்களிலும் கோடிக்கணக்கான பெண்களும் அவர்களின் பெற்றோரும் கைகட்டி நிற்கும் அவல நிலை ஏற்படும். ஆகவே அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் இந்த முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.