உயிரிழப்பு 
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

மேட்டூர் அருகே கிணற்றில் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்தில் லக்கம்பட்டி, நீதிபுரம், சின்னதண்டா, பெரிய தண்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வன எல்லையை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். சில நேரங்களில் யானைகள் அப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நீதிபுரம் பகுதியில் விவசாயி மயில்சாமி என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தின் கிணற்றில் நள்ளிரவில் ஒரு யானை தவறி விழுந்து விட்டது. கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் சிறிது நேரத்தில் யானை நீரில் மூழ்கி இறந்தது. இன்று காலை தோட்டத்துக்கு சென்ற மயில்சாமி கிணற்றை பார்த்தபோது அங்கு யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கிணறு ஆழமாக இருப்பதால் யானை உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து யானை உடலை மீட்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கிணற்றில் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.