எழும்பூர் அருங்காட்சியகம் 
உள்ளூர் செய்திகள்

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வருகைப்பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு அருங்காட்சியகம் (மியூசியம்) உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1846-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இது இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகம் ஆகும். 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அருங்காட்சியக வளாகத்தில் கன்னிமாரா நூலகம், பபாசியின் நிரந்தர புத்தகக்காட்சி விற்பனை நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

மிகவும் அமைதியான சூழல் காணப்படுவதால் போட்டி தேர்வுக்கு படிப்பவர்களும் இங்கு வருகிறார்கள். இந்த வளாகத்திற்குள் நுழைய இதுவரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வருகைப்பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையின் மையத்தில் அமைந்துள்ள இந்த பழமையான அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தினால் பலரும் பலன் அடைந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இங்கு வந்து எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் சிலர் வெளி வாகனங்களை பார்க்கிங் வசதிக்காக அனாவசியமாக உள்ளே கொண்டு நிறுத்துகின்றனர்.

இதன் காரணமாக வருகைப்பதிவேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு அதிகாரிகள் உள்பட யார் உள்ளே வந்தாலும் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனாவசியமாக உள்ளே வரும் நபர்களை தடுக்க முடியும். விரைவில் கணினி மயமாக்கப்பட்ட வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT