தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

தன்னை பார்க்க வரவேண்டாம் எனக் கூறியதால் கள்ளக்காதலி வீட்டு அருகே டிரைவர் தற்கொலை

குஜிலியம்பாறை அருகே கள்ளக்காதலி பார்க்க மறுத்ததால் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குஜிலியம்பாறை:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் இனாம்குளத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே லந்தகோட்டை முத்துக்காபட்டியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இதனால் செந்தில்குமார் ரகசியமாக அந்த பெண்ணை சந்தித்து வந்தார். இதையறிந்த செந்தில்குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணை பார்ப்பதற்காக செந்தில்குமார் முத்தக்காபட்டிக்கு சென்றார். அப்போது அவர் இனிமேல் தன்னை பார்க்க வரவேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் அந்த பெண்ணின் வீட்டின் அருகே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் அவரை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து குஜிலியம் பாறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.