கொலை செய்யப்பட்ட செல்வம் 
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலை- கூலிப்படையை ஏவியது வியாசர்பாடி முருகேசன்?

மடிப்பாக்கத்தில் எந்த இடத்தில் வைத்து செல்வத்தை கொலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு சதி திட்டத்தை வியாசர்பாடி முருகேசன்தான் வகுத்து கொடுத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாலை மலர்

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜாஜி நகரில் உள்ள தனது அலுவலகம் முன்பு மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

ரியல் எஸ்டேட் தொழில் முன் விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் மூலம் ஆய்வு செய்ததில் கொலையாளிகள் சென்னையில் இருந்து திருச்சி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது.

அதன்பேரில் சமயபுரம் அருகே ஒரு காரை மடக்கி தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளர் ராதா கிருஷ்ணன் கைதானார். அவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், “எனக்கும், செல்வத்துக்கும் முன் விரோதம் இருந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் சமீப காலமாக எந்த பிரச்சினைகளிலும் ஈடுபடவில்லை. அவரவர் தொழிலை பார்த்து வந்தோம்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், விக்னேஷ், கிஷோர் குமார் ஆகிய ஐந்து பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள்தான் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வத்தை கொன்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த 5 வாலிபர்களும் 20 மற்றும் 21 வயது உடையவர்கள். வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதிகளை சேர்ந்த இவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை வாங்கி கொண்டு செல்வத்தை வெட்டி கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கூலிப்படையை இயக்கியது வியாசர்பாடி முருகேசன் என்ற ரவுடி என்பது தெரியவந்தது. வியாசர்பாடி முருகேசன்தான் செல்வத்தை கொலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

மடிப்பாக்கத்தில் எந்த இடத்தில் வைத்து செல்வத்தை கொலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு சதி திட்டத்தை வியாசர்பாடி முருகேசன்தான் வகுத்து கொடுத்து உள்ளான். அதோடு ராஜாஜி நகரில் செல்வம் அலுவலகம் அருகே அவன் ஒத்திகையிலும் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

கூலிப்படையினரிடம் போலீசார் விசாரித்த போது தங்களுக்கு வியாசர்பாடி முருகேசன் உத்தரவிட்டது மட்டுமே தெரியும். உண்மையில் செல்வத்தை கொலை செய்ய தூண்டிவிட்ட நபர் பற்றி தெரியாது என்று தெரிவித்தனர்.

எனவே வியாசர்பாடி முருகேசன் பிடிபட்டால்தான் செல்வத்தை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பது தெரியும். கொலைக்கான உண்மையான காரணமும் தெரிய வரும். ஆகையால் வியாசர்பாடி முருகேசனை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி: 16-ந்தேதி தேரோட்டம்