திண்டுக்கல்:
திண்டுக்கல் பழனி சாலையில் முருகபவனத்தில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு 48 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு அவை தரம் பிரிக்கப்படுவது வழக்கம். இதனால் இந்த பகுதியில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கும்.
கோடை காலங்களில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதன்படி நேற்று இரவு குப்பைக்கிடங்கில் தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பற்றி சுற்று வட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நகர் மேற்கு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் திண்டுக்கல் பழனி சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் தூக்கம் இன்றி தவித்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீ விபத்து நடக்காமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. கோடை காலங்களில் தீ விபத்து நடப்பதும், புகை மண்டலத்தால் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாவதுடன் சுற்றுப்புற பகுதி மக்கள் சுவாசப்பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குப்பைக்கிடங்கு உள்ள பகுதியை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்க வேண்டும். தீ விபத்து நடைபெறும் சமயங்களில் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.