தருமபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் நேற்று இரவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார்.
பொறுமையாக தி.மு.க.வுக்காக உழைத்து கொண்டே இருந்தால் பதவியும், பொறுப்பும் நம்மை தேடி வரும் . தற்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறுகின்றனர். ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத காலத்தில் மக்களிடம் பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சாதனையை செய்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து நின்றாலும் ஜீரோதான். தனித்தனியாக நின்றாலும் தமிழகத்தில் அவர்களுக்கு கிடைக்க போவது ஜீரோதான். ஆனால் தமிழகத்தில் என்றுமே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹீரோதான்.
தமிழகத்தில் இன்று நேற்று அல்ல. ஆரம்பம் முதலே பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த இயக்கம் தி.மு.க. தான். பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை கொடுத்தது நமது தாய் கட்சியான நீதி கட்சி. பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கியது கலைஞர் தான். அதே போல் தற்போது பெண்களுக்கு அரசியலில் உரிமையை 50 சதவீதம் அளித்தது தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
இந்தியாவிலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதே போல் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடனையும் தள்ளுபடி செய்ததோடு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற சீரிய திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியவர். மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாளும், பா.ஜனதாவுக்கும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வுக்கும் இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.