தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக மதலை முத்து வேலை பார்த்து வந்தார். இவரது வீடு தருமபுரி ஏமக்குட்டியூர் அருகே அதியமான் நகரில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ஜெயக் குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் , ஏமக்குட்டியூரில் உள்ள மதலைமுத்து வீட்டுக்கு வாகனத்தில் வந்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர்.
வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர். அங்கு இருந்த சில ஆவணங்களை எடுத்து சரிபார்த்து ஆய்வு செய்தனர்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலராக ஜெயராமன், வேலை பார்த்து வருகிறார். இவரது வீடு பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி வீடு உள்ளது.
இவரது வீட்டிலும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனரின் நேர்முக உதவியாளராக ஆனந்தன் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, மொரப்பூர், தருமபுரி ஆகிய இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்துள்ளார். இவரது வீடு அரூர் குறிஞ்சி நகரில் உள்ளது.
இதையடுத்து இவரது வீட்டிலும் லஞ்ச போலீசாரின் சோதனை நடந்தது. இங்கும் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்குள்ளான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதலை முத்து, ஜெயராமன், மற்றும் ஆனந்தன் ஆகியோர் தங்களது பணி காலத்தில் எல்இடி பல்புகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை நடந்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளிலும் சென்னை பதிவெண் கொண்ட வாகனங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது நகைகள், பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்று தெரியவில்லை.