திருத்தணி:
திருத்தணி அருகே தலையாரி தாங்கல் என்ற கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து குளத்தில் குளிப்பதற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வேனில் வந்துள்ளனர்.
அதில் சிவகுமார் என்ற முருக பக்தர் தன் குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை கண்ட அவர்களது நண்பர்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளனர். குளத்தில் அதிக அளவு ஆழம் மற்றும் பாசிகள் நிறைந்துள்ள காரணத்தால் திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் தேடியும் சிவகுமார் உடல் கிடைக்கவில்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற வாலிபர் குளத்தில் இறங்கி நடுப்பகுதி சென்று சிவகுமார் உடலை மீட்டு வந்தார்.
போலீசார் சிவகுமார் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.