சிறுமுகை:
மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறுமுகை, காரமடை , தேரம்பாளையம், மொங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் கருவேப்பிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்காம்பு ரகம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறத்தண்டுகளை உடைய கருவேப்பிலை மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் உடையதாக கருதப்படுவதால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கறிவேப்பிலை விவசாயிகள் செங்காம்பு ரக கறிவேப்பிலையை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரசித்தி பெற்ற செங்காம்பு ரக கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து புவிசார் குறியீடு பெறுவதற்குத் தேவையான ஆதாரங்களையும், தகவல்களையும் சேகரிக்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கறிவேப்பிலை விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வனக் கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து வனக் கல்லூரி முதல்வர் பார்த்திபன் கூறும்போது இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் செங்காம்பு ரக கருவேப்பிலை குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்களை கல்லூரிக்கு வழங்க முன்வர வேண்டும். அந்த ஆவணங்களின் அடிப்படையில் செங்காம்பு கறிவேப்பிலைக்கு விரைவில் புவிசார் குறியீடு பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.