நூல் 
உள்ளூர் செய்திகள்

நூல் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் முடிவு

பஞ்சு, நூல் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களை உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ளவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூரில் பனியன் ஆடைகளை உற்பத்தி செய்யும் சிறு, குறு பனியன் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். நாளொன்றுக்கு ரூ.200 கோடிக்கு பனியன் உற்பத்தி நடக்கிறது. பின்னலாடை உற்பத்திக்கு நூல் முக்கிய மூலப்பொருளாக விளங்கி வருகிறது. கடந்த 1ம் ஆண்டுகளில் மட்டும் நூல் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் பின்னலாடை தொழில் முடக்க நிலையை சந்தித்துள்ளது.

இந்தநிலையில் மே மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இது பனியன் உற்பத்தியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். சைமா சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி, நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர். அதுபோல் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நூல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசிடம் முறையிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பஞ்சு, பருத்தி நூல் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட வேண்டும். பஞ்சு, நூல் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களை உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ளவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க கோரியும், நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும் வருகிற 16ந்தேதி முதல் 21ந் தேதி வரை அனைத்து தொழில் நிறுவனங்கள், பணியாளர்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபோல் கரூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட தொழில்துறையினரையும் ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட ஜவுளி அமைப்பினரையும் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள ப்படும். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.