வேடசந்தூர்:
மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் ரவி (வயது 45). பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதால் அவர்கள் வீட்டில் தகராறு ஏற்பட்டது.
குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக நாமக்கல் பகுதியில் ஒரு கோவில் உள்ளதாகவும் அங்கு சென்று வேண்டிக் கொண்டு கையில் கயிறு கட்டினால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம் என அறிவுரை தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய ரவி, அவரது நண்பர்கள் இன்பராஜ் (40), கார்த்திக் (40), அய்யனார் (35) ஆகியோர் ஒரு காரில் மதுரையில் இருந்து நாமக்கல் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி 4 வழிச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது கையில் கயிறு கட்டினால் அதன் பிறகு மது குடிக்கவே முடியாது. மீறி குடித்தால் சாமி குற்றமாகிவிடும். எனவே கடைசியாக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கட்டிங் அடிக்கலாம் என ரவி யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றனர்.
அப்போது குடியை மறக்க கோவிலுக்கு வரும் வழியில் மது குடிக்கலாமா? என மற்றொரு நண்பர் தெரிவிக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். மேலும் ஒருவர் பிளேடால் ரவியின் கழுத்தை அறுக்க வந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அவர்களை விலக்கி விட்டு வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது நாங்கள் மதுரைக்காரன். யாருக்கும் பயப்படமாட்டோம் என கூச்சலிட்டனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினர்.
இதனைத் தொடர்ந்து 4 பேர்களின் குடும்பத்தினர் செல்போன் எண்களை வாங்கி இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். மீண்டும் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் குடும்பத்தில் யாரையாவது ஒருவரை அனுப்பி வைய்யுங்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மதுரையில் இருந்து வந்த கார் டிரைவர் தலைதெறிக்க தப்பி ஓடி விட்டார். இதனால் மீண்டும் காரில் செல்ல முடியாமல் வேடசந்தூரில் இருந்து மதுரைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.