ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 220 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கிராமங்களில் நடத்தப்பட உள்ள சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக் கலவை இலவசமாக வழங்கப்படும். சிறந்த முறையில் கலப்பின கிடேரி கன்றுகளை வளர்ப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.