மேம்பால பணிகள் 
உள்ளூர் செய்திகள்

துறைமுகம்-மதுரவாயல் இடையே 2 அடுக்கு மேம்பால பணிகள்

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூ.6 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை துறைமுகம் மற்றும் தி மெட்ராஸ் சாம்பர் சார்பில் பிரதமரின் ‘கதி சக்தி திட்டம்’ குறித்த கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் நடந்தது.

இதில் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் பல்துறை பங்களிப்பு தேவைப்படுகிறது. இத்துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சரக்கு போக்குவரத்துக்காக நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவே பிரதமரின் கதி சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூ.6 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. அதன்படி இந்த சாலை சுமார் 20 கி.மீட்டர் தூரம் அமைகிறது. கோயம்பேட்டில் இருந்து துறைமுகம் வரை 2 அடுக்கு மேம்பாலமாக இருக்கும். மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை ஓரடுக்கு மேம்பாலம் மட்டுமே அமைக்கப்படும்.

13 இடங்களில் சாலையில் இருந்து இறங்கும் பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. நேப்பியர் பாலம் முதல் சுமார் 9 கி.மீட்டர் தூரம் கூவம் ஆற்றின் பகுதிகளில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இரண்டு அடுக்கு மேம்பாலமாக கட்டப்படுகிறது.

இதேபோல் ஐ.என்.எஸ். அடையார் பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்புகளும் இந்த பகுதிக்குள் வருகின்றன. அவற்றை அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்ட சாலையில் பொதுமக்களின் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக நிர்வாகம், கடற்படை ஆகியவை இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து அதிகபட்சமாக 30 மாதங்களில் உயர்மட்ட சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி எஸ்.பி. சோமசேகர் பேசுகையில், ‘‘இத்திட்டத்திற்காக கூவம் ஆற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்கள் அகற்றப்படும். தற்போது ஆங்காங்கே ஒரு தூண் மட்டுமே அமைக்கப்படும். சேலம்- சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றார்.