சென்னை:
தமிழகத்தின் கிராம புறங்களில் வசிக்கும் மக்கள் உணவு சமைக்க பயன்படுத்தும் வத்தல், மஞ்சள், மிளகு உள்ளிட்ட பொருள்களை வாங்கி அவர்களே அம்மியில் அரைத்து பயன்படுத்துவார்கள்.
ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர், இவற்றை பொடிகளாக வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக அனைத்து கடைகளிலும் மஞ்சள், வத்தல், மல்லி, மிளகு பொடிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சமையல் பொடிகளில் கலப்படம் செய்யப்படுவதாக சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து கொத்தவால்சாவடியில் உள்ள சில கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 16,500 கிலோ கலப்பட வத்தல் பொடி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல கோயம்பேடு உள்பட நகரின் பல பகுதிகளிலும் கலப்பட உணவு பொருள்கள் குறித்த சோதனை நடத்தப்பட்டதில் டன் கணக்கில் கலப்பட பொடிகள், உணவு பொருட்கள், பழ வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
கலப்பட பொருட்களை ஆய்வு செய்ததில் வத்தல் பொடியில் சிந்தெடிக்கும், மஞ்சள் பொடியில் குரோமியம் போன்ற ரசாயனமும் கலந்திருப்பது தெரியவந்தது. இவற்றை கலப்பதின் மூலம் இந்த பொடிகள் பார்ப்போரை வாங்க தூண்டும் வகையில் காணப்படும்.
மேலும் பழங்களை பழுக்க வைக்கவும் இது போன்ற ரசாயன கற்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்களை கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுவதுபோல அதன் தோற்றம் மாறி இருக்கும்.
ரசாயன பொருள்கள் கலந்த உணவு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்பட்டு அவதிப்பட நேரிடும்.
கலப்பட பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து சென்னையை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
வீட்டின் அவசர தேவைக்காக வாங்கப்படும் கோதுமை மாவு, சில நாட்களிலேயே நமத்து போய் விடுகிறது. அதன்மீது பூஞ்சை பிடித்து பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது. வாங்கிய மாவு, தீரவில்லை என்றாலும் அதனை வெளியே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுபோல கடைகளில் விற்கப்படும் பழங்களை பார்த்து வாங்கி வந்தால், அவற்றின் தோலை உரித்த பின்பு அந்த பழம், பழமாக இல்லாமல் கட்டியாக இருக்கிறது. பலமுறை இதுபோன்ற நிகழ்ச்சி எங்கள் வீடுகளில் நடந்துள்ளது.
புட்டு மாவு வாங்கி வந்தாலும் இதே நிலைதான் ஏற்படுகிறது. இட்லி பொடி, மிளகு பொடியும் கூட இப்படி தான் இருக்கிறது. இவற்றை நாங்களே வாங்கி பொடி செய்து வைத்து கொள்ளலாம். ஆனால் அதற்கான காலமும், நேரமும் இல்லாததால் கடைகளில் சென்று பொடிகளை வாங்குகிறோம்.
இந்த பொடிகளில் கலப்படம் இருப்பதாக கூறப்படுவது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கேட்டால் இதுபோன்ற பொருள்களை வாங்கவே மனம் மறுக்கிறது.
இனிமேல் கடைகளுக்கு சென்று சமையல் பொடி, பாக்கெட்டுகளில் அடைத்த உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையும் படியுங்கள்... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 7ம் தேதி டெல்லி செல்கிறார்