விபத்து 
உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதல்- கடலூரை சேர்ந்த வக்கீல் விபத்தில் பலி

கடலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கடலூர்:

கடலூரை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது 38). வழக்கறிஞரான இவர் தனது நண்பர் முகுந்தன் உள்ளிட்டோருடன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காரில் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் நேற்று இரவு மதுரையில் இருந்த கடலூர் புறப்பட்டார்.

இந்த காரை கடலூரை சேர்ந்த ஷேக் உசேன் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை டிரைவர் முந்த முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் டிரைவர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் உருக்குலைந்து போனது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹேமந்த்குமார், காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் வெளியே வர முடியாமல் டிரைவர் ஷேக் உசேன் மற்றும் முகுந்தன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான வக்கீல் ஹேமந்த்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.