விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

விராலிமலை அருகே விபத்து- முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி வக்கீல் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இன்று அதிகாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

விராலிமலை:

கடலூரை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது 38). வழக்கறிஞரான இவர் தனது நண்பர் முகுந்தன் உள்ளிட்டோருடன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காரில் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் நேற்று இரவு மதுரையில் இருந்து கடலூர் புறப்பட்டார்.

காரை கடலூரை சேர்ந்த ஷேக் உசேன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் அவர்களது கார் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே புதுக்கோட்டை பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை டிரைவர் முந்த முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் டிரைவர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதினார். இதில் காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹேமந்த்குமார், காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் வெளியே வர முடியாமல் டிரைவர் ஷேக் உசேன் மற்றும் முகுந்தன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான வக்கீல் ஹேமந்த்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.