விபத்து 
உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே மினி லாரி மீது கார் மோதல்- பெண் பக்தர்கள் 2 பேர் பலி

திருச்சி அருகே மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர்.

மாலை மலர்

நெ.1டோல்கேட்:

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கலைக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் 17  பெண்கள் விரதமிருந்து வந்தனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று புறப்பட்டு பேருந்தில் சமயபுரத்திற்கு வந்தடைந்தனர்.

அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு இரவு கோவில் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு கலைக்குழிப்பட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள நாச்சியார்பட்டி பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 21) என்பவர் மினி லாரியில் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்து சமயபுரத்தில் இறங்கி கொண்டிருந்தார்.

இதனைக்கண்ட அந்த பெண் பக்தர்கள் அர்ஜூனிடம் பேசி மினி லாரியில் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அந்த மினி லாரியில் புறப்பட்டு சென்றனர். மினி லாரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெம்பர்1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அதே திசையில் திருச்சி நோக்கி மண்ணச்சநல்லூர் தாலுகா, ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல்கபூர் மகன் முகமது உசேன் (39), என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக மினி லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இதில் நிலைகுலைந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் பக்தர்கள் 17 பேர் மற்றும் டிரைவர், கிளீனர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். இதனையறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் கலைக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மனைவி சாந்தி (37), ரவி மனைவி வசந்தி (47), ஆகியோர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முகமது உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.