உள்ளூர் செய்திகள்

வாடிப்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி

விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வாடிப்பட்டி:

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது55). வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் முகவராக இருந்து வந்தார். இவரது குலதெய்வ கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளது.

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து வாடகை காரில் கருப்பசாமி, அவரது மனைவி தனலட்சுமி (50), மகள் சீதாலட்சுமி (20) ஆகியோர் புறப்பட்டனர்.

காரை மதுரை தோப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி (50) என்பவர் ஓட்டி சென்றார். வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இதில் காருக்குள் இருந்த கருப்பசாமி, கார் டிரைவர் பால்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஏட்டு சுந்தர பாண்டி விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி இருந்த கருப்பசாமி, பால் பாண்டியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.