கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜி(36). இவரது மனைவி ஐஸ்வர்யா (32).
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தனது கணவருடன் கோவளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றார். அங்கு சென்றதும் மறுநாளே ஸ்ரீஜி புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து விட்டார். ஐஸ்வர்யா மட்டும் தாய் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய அவரது உறவினர்கள் உனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் கதறி அழுதார். மகள் அழுகும் சத்தம் கேட்டு பெற்றோர் வந்து என்ன நடந்தது என விசாரித்தனர். அவர்களிடம் கணவர் இறந்து விட்ட தகவலை கூறினார்.
பின்னர் தனது கணவரின் உடலை நான் பார்க்க வேண்டும் என பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தங்கையை அழைத்து கொண்டு செல்லுமாறும் கூறினர்.
இதையடுத்து ஐஸ்வர்யா தனது தங்கை ஷாரிமோளை (30) அழைத்து கொண்டு திருவல்லத்திற்கு செல்ல அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்குள்ள சாலையை அவர்கள் 2 பேரும் கடக்க முயன்றனர்.
அந்த சமயம் அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று வந்த வேகத்தில் இவர்கள் இருவர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.
இதனை அங்கு நின்றிருந்த மக்கள் பார்த்து, திருவல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்ப்பதற்காக சென்ற மனைவி தங்கையுடன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.