கொலை 
உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவியின் சகோதரரை சுத்தியலால் அடித்துக் கொன்ற கட்டிடத் தொழிலாளி

ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத் தகராறில் மனைவியின் தம்பி கொலை செய்து தப்பி ஓடிய ராஜனை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

சிங்காநல்லூர்:

தர்மபுரியை சேர்ந்தவர் முத்து (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களுக்கு கோவை வந்தார். பின்னர் ராமநாதபுரம் 80 அடி ரோடு அருகே உள்ள சர்ச் ரோட்டில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தார். இன்னும் திருமணமாகவில்லை.

பொங்கல் பண்டிகையையொட்டி முத்துவின் அக்கா முத்துலட்சுமி, கட்டிட தொழிலாளியான அவரது கணவர் ராஜன் (45) மற்றும் அவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் முத்துவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு முத்துலட்சுமிக்கும், ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜன் தனது மனைவியை பிரிந்து சென்றார்.

இந்த நிலையில் ராஜன் மீண்டும் தனது மனைவியை தொடர்பு கொண்டு தன்னுடன் வந்து சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

இதற்கெல்லாம் காரணம் முத்து தான் என ராஜன் நினைத்தார். இதனால் முத்துவை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். இதையடுத்து நேற்று இரவு 12 மணி அளவில் ராஜன், முத்துவை கொலை செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிள் மீது நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். 3 மணி அளவில் முத்துலட்சுமி வீட்டின் கதவை திறந்து வெளியே உள்ள கழிவறைக்கு வந்தார். அப்போது வெளியே காத்திருந்த ராஜன் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த சுத்தியலை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த முத்துவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த முத்துலட்சுமி வீட்டிற்குள் ஓடி வந்தார். ஆனால் அதற்குள் ரத்தவெள்ளத்தில் முத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ராஜன் சுத்தியலுடன் நிற்பதை பார்த்த முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். உடனே ராஜன் அங்கு இருந்து தப்பி சென்றார்.

தம்பி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு முத்துலட்சுமி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத் தகராறில் மனைவியின் தம்பி கொலை செய்து தப்பி ஓடிய ராஜனை தேடி வருகிறார்கள்.