மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜாண் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா (28). இத்தம்பதிக்கு ஜோகன் ரிஷி (4) என்ற மகனும், 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று மதியம் ஜோகன் ரிஷி வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.1.15 மணியளவில் தாய் சகாய சில்ஜா ஜோகன் ரிஷியை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார். அப்போது சிறுவனை காணவில்லை.
இதனால் பீதியடைந்த சகாய சில்ஜா அருகில் உறவினர் வீடுகள் உள்பட அப்பகுதி முழுவதும் தேடினார். தகவலறிந்த உறவினர்களும் சேர்ந்து ஊர் முழுவதும் தேடினர். ஆனால் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்வில்லை.
இது குறித்து தாய் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த குளச்சல் டி.எஸ்.பி.தங்கராமன், பயிற்சி டி.எஸ்.பி.சிந்து, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருள் பிரகாஷ் ஆகியோரும் விரைந்து சென்று நேற்றிரவு முழுவதும் கடற்கரை பகுதியில் தேடினர். ஆனாலும் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாயமான சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் கை காப்பு மற்றும் வெள்ளியில் அரைஞான் கயிறு அணிந்திருந்தான். ஒரு வேளை நகைக்காக மர்ம நபர்கள் யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடியபட்டணத்தில் 4 வயது சிறுவன் மாயமான சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் விளையாடிய இடத்திற்கும் கடலுக்கும் 150 மீட்டர் தூரமே உள்ளது. இதனால் சிறுவன் கதி குறித்து மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். இன்று 2 வது நாளாகவும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.