விபத்து 
உள்ளூர் செய்திகள்

தேவதானப்பட்டி அருகே பைக் மீது கார் மோதி தந்தை, மகன் பலி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே எ.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 29). இவர் தனது மனைவி கவுரி, மகன் ராஜபாண்டி (4), தாய் பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தேவதானப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை நலன் விசாரித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி மற்றும் அவரது மகன் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த கவுரி மற்றும் பழனியம்மாள் ஆகியோர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற தேவதானப்பட்டி போலீசார் செல்லப்பாண்டி மற்றும் ராஜபாண்டி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT