தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

உடல் பருமனால் விரக்தி- வங்கி அதிகாரியின் மகள் தற்கொலை

உடல் பருமன் காரணமாக மன உளைச்சலில் இருந்த வங்கி அதிகாரியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்டிரியா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 35). இவர் திருச்சி பாரத ஸ்டேட் வங்கியில் உதவி துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் புருசோத்தமன் (40). இந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சிவானி (13) என்கிற மகள் இருந்தார். அவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை பிரிந்து சென்றதால் சிவானி தனது தாயுடன் வசித்து வந்தார். சர்மிளா தினமும் காலையில் வங்கிக்கு வேலைக்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் அதேபோல் சென்றுள்ளார்.

மாலையில் சர்மிளா வீடு திரும்பி நீண்ட நேரம் ஆகியும் மகள் சிவானி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அப்போது சிவானி மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளா அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும் இதுபற்றி கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது சிவானி பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மாணவி தினமும் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தது தெரியவந்தது. மேலும் தான் அதிக பருமனாக இருப்பதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுபற்றி தனது தாயாரிடமும் கூறி வருத்தப்பட்டு உள்ளார். உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த போதிலும் உடல் பருமன் குறையவில்லை.

எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதை எவ்வாறு நிறைவேற்றலாம் என அவர் யோசித்துள்ளார். பின்னர் தன்னுடைய செல்போனில் யூடியூப்பிற்கு சென்று எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வழிகளை பார்த்து இந்த தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.