உள்ளூர் செய்திகள்

சேலத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வங்கி ஊழியர் கைது

ரோகிணியின் தந்தை சஞ்சீவி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணமாகி 5 ஆண்டு ஆனதால், சேலம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

சேலம்:

சேலம், கருப்பூர் அடுத்த மாங்குப்பை, பழையூர் சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவர் அழகாபுரம், பிருந்தாவன் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரோகிணி (30). இவர்களது மகன் குபேந்திரன் (3).

இந்த நிலையில், பிரகாஷ் தனது வீடு அருகே உள்ள ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசுவதோடு, குறுந்தகவல் அனுப்பி வந்தார். அதை ரோகிணி கண்டித்ததால் தம்பதி இடையே ஓராண்டாக பிரச்சினை இருந்தது. 10 நாட்களுக்கு முன்பு பிரகாஷிடம் கோபித்துக்கொண்டு, அவரது மனைவி, தாய் வீட்டுக்கு சென்றார்.

அவரை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரோகிணி, இனிமேல் கணவருடன் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என முடிவுக்கு வந்தார்.

முன்னதாக அவர், கணவர் வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, நான் சொல்வதை கணவர் கேட்க மறுக்கிறார். என்னுடன் பாசமாகவும் இருப்பதில்லை. இது பற்றி கேட்டால் என்னை அடித்து உதைக்கிறார். இனிமேல் வாழ விருப்பமில்லை, என பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ரோகிணியின் தந்தை சஞ்சீவி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணமாகி 5 ஆண்டு ஆனதால், சேலம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

இதனிடையே கருப்பூர் போலீசார், கடிதத்தையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT