நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது40). லோடு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இடப்பிரச்சினை தொடர்பாக அவரது உறவினர்கள் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலமுருகனின் தந்தையான மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியன் (57), அவரது மனைவி ராஜம்மாள் (52), பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்த அனிதா (36), தாழையூத்து பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ராஜம்மாள் மற்றும் அனிதா ஆகியோரை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர். அழகு பாண்டியன், சங்கர நாராயணன், பாலமுருகன் ஆகியோரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் அனிதாவின் கணவரான சிதம்பர குமார் (39) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த சிதம்பர குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியனை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே நேற்று சசிகுமாரின் உறவினர்கள் நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சசிகுமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சசிகுமார் உடலை வாங்க மறுத்தனர்.
அவர்களிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சுப்பையாபுரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சசிகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று சசிகுமாரின் மனைவிக்கு அங்கன்வாடியில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும், அவர்களுக்கு அரசு மூலம் இலவச வீடு கட்டி கொடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் சசிகுமாரின் 2 மகன்களின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
அதைத்தொடர்ந்து சசிகுமார் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.