ஜோலார்பேட்டை:
ஆந்திர மாநிலம் திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ஹிமா (வயது 23), நடன கலைஞர். தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தார். ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் ஹிமா உள்பட 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கினர்.
இந்த நிலையில் இன்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.