அன்புமணி ராமதாஸ் 
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் முழு மதுவிலக்கே பா.ம.க.வின் இலக்கு -அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் இன்று மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதற்கும், மது வணிக நேரம் குறைக்கப்பட்டிருப்பதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அரசியல், சட்டப் போராட்டங்களே காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால், போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல.

சர்ச்சைக்குரிய மதுக்கடை, பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் மூடப்பட்ட 3321 மதுக்கடைகளில் ஒன்றாகும். பின்னர், உச்சநீதிமன்றம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டது. அந்த மதுக்கடையால் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் கணக்கில் அடங்காதவை.

பாட்டாளி மக்கள் கட்சி பொதுநலனுக்காக எதையும் செய்யத்துணிந்த தொண்டர்கள் நிறைந்த இயக்கம் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், அத்தகைய தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகவும் தேவையானவர்கள்; தீக்குளிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி தீரம் மிக்க தொண்டர்களை இழக்க விரும்பவில்லை. அதனால், பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடு வதை தவிர்க்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை நோக்கங்களில் ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான்.

மது விலக்கை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை பா.ம.க. நடத்தி உள்ளது. மற்றொருபுறம் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் 3321 மதுக்கடைகளை மூட வைத்தது. தமிழகத்தில் இன்று மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதற்கும், மது வணிக நேரம் குறைக்கப்பட்டிருப்பதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அரசியல், சட்டப் போராட்டங்களே காரணம்.

தமிழ்நாட்டில் மது விலக்கை ஏற்படுத்துவது தான் தலையாயப் பணியாகும். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ம.க. அறிவிக்க உள்ளது. மதுவை ஒழித்து, மக்களைக் காக்க எந்த தியாகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...கேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் ஷவர்மா- 3 கல்லூரி மாணவர்கள் பாதிப்பு