நகை 
உள்ளூர் செய்திகள்

நாளை அட்சய திருதியை- சென்னையில் நகைக்கடைகளை அதிகாலையிலேயே திறக்க ஏற்பாடு

பொது மக்களின் வசதிக்காக சென்னையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கே நகைக்கடைகளை திறக்க கடைக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நகைக்கடைகளில் நகை வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் உள்ள செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக அட்சய திருதியை அன்று பொதுமக்கள் பலர் சிறிதளவேனும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாகவே அட்சய திருதியை நேரத்தில் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாமல் தவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் தற்போது கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளை (3 ந்தேதி) அட்சய திருதியை தினம் ஆகும்.

இதையொட்டி நாளை நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் விற்பனை நடைபெறுவதால் பொது மக்களும் தங்கம் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர்.

அட்சய திருதியை அன்று நகை வாங்குவதற்காக முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது. அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் விரும்பிய நகைகளை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதாலும் பொதுமக்கள் ஏற்கனவே நகை கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அட்சய திருதியை தினமான நாளை நகைக்கடைகளுக்கு சென்று தாங்கள் தேர்வு செய்த நகைகளை வாங்கிச் செல்வார்கள்.

இது ஒரு புறம் இருக்க முன்பதிவு செய்யாமலேயே நாளை நகைக்கடைக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கவும் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் தங்க நாணயங்களின் விற்பனையும் நாளை சூடுபிடிக்கும்.

பொது மக்களின் வசதிக்காக சென்னையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கே நகைக்கடைகளை திறக்க கடைக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நகைக்கடைகளில் நகை வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக நகை வியாபாரிகள் கூறியதாவது:

2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை அன்று நகை வாங்க பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களாக விலை சற்று உயர்ந்து இருந்தது.

3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று 39 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,840க்கு விற்பனையாகிறது. இதனால் நகை வாங்க ஆர்வமாக உள்ள பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை நகைக்கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகை வாங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அதிகாலை 4.30 மணிக்கே கடைகள் திறக்கப்படுகின்றன. நகைக்கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தங்க நாணயம் வாங்குபவர்களுக்கு தனித்தனி கவுண்டர்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அட்சய திருதியைக்காக நகைக்கடையின் பல்வேறு சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு 25 முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையும் படியுங்கள்... சாதி மோதல்களில் மாணவர்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது- அமைச்சர் வேதனை