நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான்குளத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று இரவு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது ராட்சத பாறை சரிந்து விழுந்து 6 பேர் உள்ளே சிக்கி கொண்டனர்.
அவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ள நிலையில் 4 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள் இல்லாததால் மீட்பு பணிகள் தொய்வடைந்து உள்ளது.
இதற்கிடையே மீட்பு பணி மந்தமாக நடப்பதாக கூறி, அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து நெல்லை-குமரி நான்கு வழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
இந்த கோர சம்பவம் நடந்துள்ள கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.