முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

அபுதாபியில் இன்று காலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் அதிபர்களுடன் சந்திப்பு

இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நம்மில் ஒருவர்.... நம்ம முதல்வர்’ என்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மாலை மலர்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி மாலை துபாய் சென்றார்.

அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற் கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பிறகு அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.

இதையடுத்து இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நம்மில் ஒருவர்.... நம்ம முதல்வர்’ என்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்றார். அபுதாபியில் தங்கி இருக்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இன்று மாலை 5 மணிக்கு அபுதாபியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’ அமைத்து அதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அபுதாபியில் மிகப் பிரமாண்ட பாராட்டு விழா நடத்துகிறது.

அங்குள்ள இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும். இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயர் அதிகாரிகள், பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு நாளை (செவ்வாய்க் கிழமை) அதிகாலையில் வந்து சேருவார் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா- மத்திய அரசு அறிவிப்பு