கைக்குழந்தையுடன் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தவித்த இளம்பெண் 
உள்ளூர் செய்திகள்

கணவருடன் சண்டை: கைக்குழந்தையுடன் வெளியேறி அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தவித்த இளம்பெண்

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் வெளியேறிய இளம்பெண்ணை போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். ஆனால் அதை புரியாமல் பல பெண்கள் வெளியேறி சிரமப்படுவதுண்டு.

அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் கையில் ஒரு அழகான பச்சிளம் ஆண் குழந்தையுடன் தனியாக நள்ளிரவில் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்ததும் ரோந்து சென்ற போலீசாருக்கு சந்தேகம்.

அந்த பெண்ணை அழைத்து விசாரித்த போது இந்தியில் ஒன்றிரண்டு வார்த்தை மட் டுமே பேசினார். போலீசாரால் அவரிடம் எந்த தகவலையும் அறிய முடியவில்லை.

உடனே உதவும் கரங்கள் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். சமூக சேவகர்களான சந்திரிகா, கோமதி ஆகியோர் அந்த பெண்ணை பார்த்த போது ரோட்டோரத்தில் தூங்கியும் அங்கேயே அமர்ந்தும் இருந்ததால் உடலில் அழுக்குப்படிந்து பரிதாபமாக இருந்தார்.

ஆனால் அவர் மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொண்டு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்து உளவியல் ஆலோசகர்கள் கவுன்சில் கொடுத்தனர்.அப்போது உண்மை வெளிவந்தது. அந்த பெண்ணின் பெயர் கீதா. சொந்த ஊர் நேபாளம்.

இவரது கணவர் தேஜ்பகதூர்(55). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி மற்றும் 2 மகன்கள் நேபாளத்தில் இருக்கிறார்கள். மகன்களுக்கு 20 வயதாகிறது.

தேஜ்பகதூர் மணலியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் தேஜ்பகதூருக்கும் கீதாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால் முதல் மனைவி கோபம் அடைந்துள்ளார். வயது வந்த மகன் இருக்கும் போது 2-வது திருமணம் கேக்குதாக்கும்...? என்று ஆத்திரத்தில் சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்.

ஆசை காதலியுடன் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள் என்று கூறி சென்று விட்டார்.

கடந்த 7 ஆண்டுகளாக 2-வதாக திருமணம் செய்த காதல் மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஆனாலும் முதல் மனைவியையும் மகன்களையும் கைவிட்டுவிட தேஜ்பகதூருக்கு மனம் வரவில்லை. வாங்கும் சம்பளத்தில் மாதம் தோறும் முதல் மனைவிக்கும் பணம் அனுப்பி இருக்கிறார். கீதாவுக்கும் 4 வயதில் சஞ்சய் என்ற மகனும் சமீர் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளனர். ஆரம்பத்தில் நாம் இருவர் என்று இருந்ததால் கஷ்டங்கள் தெரியவில்லை. தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்று ஆகிவிட்ட நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2-ந் தேதி கைக்குழந்தை சமீருக்கு மருந்து வாங்க செல்ல வேண்டும் என்று சொல்லி கணவரிடம் ரூ.300 வாங்கி கொண்டு புறப்பட்டு இருக்கிறார்.

வெளியே வந்த கீதாவுக்கு வீட்டுக்கு திரும்ப மனமில்லை. என்ன முடிவெடுப்பது என்றும் புரியவில்லை. மீஞ்சூர் அருகில் உள்ள வீச்சூரில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி லூகாசில் இறங்கி இருக்கிறார். அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி எஸ்டேட் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அங்கு வந்த பிறகு பெற்ற குழந்தையின் முகத்தை பார்த்ததும் தவறான முடிவு எதையும் எடுக்க அவருக்கு மனமில்லை. அதனால் செய்வதறியாமல் பஸ் நிலையத்திலேயே இருந்து இருக்கிறார்.

போலீசார் இருவரையும் மீட்டு தேஜ் பகதூரிடம் ஒப்படைத்தனர். மனைவியை பார்த்ததும் முதலில் திட்டியவர் பின்னர் அன்புடன் அரவணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மகளிர்தினம் நெருங்கி வரும் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு பெண்ணை மீட்டு குடும்பத்தோடு சேர்த்து வைத்ததில் மகிழ்ச்சி என்கிறார்கள் உதவும் கரங்கள் அமைப்பினர்.