தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அதிகாலை தேர் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 11 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இங்கு பழமை வாய்ந்த அப்பர் சாமிகள் மடம் உள்ளது. அப்பர் என்கிற திருநாவுக்கரசு சாமிகள் இங்கு ஓய்வெடுத்து சென்றுள்ளார். அவரது நினைவாகவே களிமேடு கிராமத்தில் அப்பர் சாமிகள் மடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அப்பர் சாமிகள் மடத்தின் சித்திரை சதய திருவிழா ஆண்டு தோறும் 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
94-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால் இந்த ஆண்டு அப்பர்சாமி திருவிழாவை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு இருந்தனர்.
அப்பர் சாமி திருவிழாவின் முதல் நாளான நேற்று நள்ளிரவில் தேர் திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக சிறிய சப்பரம் வடிவிலான தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் தேரில் வளைவு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தேர் திருவிழா நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.
திருவிழாவை காண களிமேடு கிராமத்தினர் மட்டுமின்றி அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களும் திரளாக கூடியிருந்தனர். 5 அடி உயர சப்பரத்தில் அலங்கார இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்ததால் 14 அடி உயரம் கொண்டதாக தேர் உயர்ந்து காணப்பட்டது.
தேரோட்டம் தொடங்கியதும் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். களிமேடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அப்பர் மடத்தில் நிலை கொள்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்பர் மடம் அருகே குறுகலான தெருவில் இருந்து பிரதான சாலைக்கு தேரை இழுத்துச் சென்றனர். தேரின் மேல் பகுதி மடக்கி இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததால் மேல் பகுதியை மடக்காமலேயே நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தேரின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரின் எடை அதிகமாக இருந்ததால் தேர் ஒரு பக்கமாக சென்றது. வளைவில் திரும்பியபோது தேரின் மேல் பகுதி மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் திடீரென உரசி மின்சாரம் தாக்கியது. இதில் மேல் பகுதியில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் தேரில் இருந்தவர்களும், தேர் திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் தாக்கியதில் கண் இமைக்கும் நேரத்தில் தேரில் இருந்த பூசாரி மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் என 10 பேர் உடல் கருகி கருண்டு விழுந்து பலியானார்கள்.
இதனை பார்த்து அதிர்ச்சியில் மூழ்கிய விழா கமிட்டியினரும், பொதுமக்களும் கூச்சல் போட்டனர். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. தேரில் பாய்ந்த மின்சாரம் 10 பேரின் உயிரையும் குடித்து விட்டது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் விவரம் வருமாறு:-
1. மோகன் (வயது22)
2. பிரதாப் (26)
3. அன்பழகன் (60)
4. ஆத்தா செல்வம் (26)
5. சாமிநாதன் (56)
6. கோவிந்தராஜ்
7. சந்தோஷ் (15)
8. ராஜ்குமார் (14)
9. ராகவன் (24)
10. நாகராஜ் (60)
11. பரணிதரன்.
இவர்களில் பரணிதரனை தவிர மற்ற 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் ஆவர். பரணிதரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
பலியானவர்களில் ஆத்தா செல்வம் கோவில் பூசாரி ஆவார். அன்பழகனும், ராகவனும் தந்தை-மகன். பிரதாப் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி அறிந்ததும் போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.
மின்சாரம் தாக்கியதில் பிரகாஷ் மகன் கவுசிக் (13), மதன் மகன் நித்தீஸ்ராம் (12), அருண்குமார் (24), மதன் மனைவி சுகந்தா (33), ரவி (48), கலியமூர்த்தி (45) அவரது மகன் ஹரீஸ்ராம் (13), அன்பழகன் மகன் மாதவன் (14), மோகன் (54) உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் கவுசிக், நித்தீஸ்ராம், அருண்குமார் ஆகிய 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் களிமேடு பகுதிமக்கள் இறந்தவர்களின் உறவினர்கள், சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் என ஏராளமானோர் கூடி உள்ளனர்.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி.கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மின்சாரம் தாக்கி பலியான 10 பேரின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
களிமேடு கிராமத்தில் நடந்த இந்த விபத்து தஞ்சை மாவட்டத்தில் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். ஆசை ஆசையாய் திருவிழாவை பார்க்க சென்ற 2 சிறுவர்களும் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மற்ற 8 பேரும் உயிரிழந்திருப்பதால் அப்பகுதி முழுவதுமே சோகமயமாகவும், கண்ணீரும் கம்பளையுமாகவும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.