திருவொற்றியூர்:
மணலி புதுநகரில் கடந்த 12-ந் தேதி ஒரு வீட்டில் கள்ள நோட்டுக்களை அச்சடித்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த யுவராஜ், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ் , திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த ஜான் ஜோசப் வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான் , செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 200 ரூபாய் நோட்டுக்கள் ரூ.16 லட்சம், 3 கலர் பிரிண்டர்கள், ஒரு காரை பறிமுதல் செய்தனர். கைதான கள்ளநோட்டு கும்பலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை ஆட்டோ ஒன்றின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் படி குறிப்பிட்ட ஆட்டோவில் சோதனை செய்தபோது ரூ.30 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டுகட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் யுவராஜ் உள்பட 3 பேரையும் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.