மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவகிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.
கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.