கைது 
உள்ளூர் செய்திகள்

வருசநாடு அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

வருசநாடு அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு அருகே நந்தனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தவம் (வயது 43). இவர் வருசநாடு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கியுள்ளார். அதற்காக அவர் கொடுத்த 100 ரூபாய் நோட்டுக்கள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது போல இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டாஸ்மாக் கடை பணியாளர் தெய்வேந்திரன் இது தொடர்பாக வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தவத்தை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்து பார்த்தபோது அவை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து தவத்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (22), செல்வம் (45), பெரியகருப்பன் (53) ஆகியோரிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பெற்றதாக அவர் தெரிவித்தார். போலீசார் ராஜ்குமார், செல்வம் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கடமலைக்குண்டு கிராமத்தில் கன்னிமார் ஓடை அருகே தனியார் தோட்டத்தில் கள்ளநோட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 500, 200 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பெரியகருப்பனை பிடித்த பின்புதான் இந்த நோட்டுக்கள் எங்கு அச்சிடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளிவரும். மேலும் இந்த கும்பல் தேனி மாவட்டத்தில் வேறு ஏதேனும் இடத்தில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளனரா? இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.