கோவை:
குழந்தைகள் வேண்டாம் என கருதும் பெற்றோர் சில நேரங்களில் குழந்தைகளை சாலையோரம், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விட்டுச் செல்கின்றனர்.
அவ்வாறு கைவிடப்படும் குழந்தைகள் 108 ஆம்புலன்சு மூலமாக மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கைவிடப்பட்ட, ஆதரவற்ற 18 குழந்தைகளும், 2021-ம் ஆண்டில் இதுவரை 9 குழந்தைகளும் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 27 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறியதாவது:-
திருமணமாகாமலே பிறக்கும் குழந்தைகள், ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என நினைப்பவர்கள் எங்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கலாம். அவ்வாறு ஒப்படைப்போரின் பெயர் விவரங்கள் வெளியே தெரியாது. குழந்தையை ஒப்படைக்க எழுதி கொடுத்தால் மட்டும் போதும். ஒப்படைக்கப்பட்ட குழந்தையை 60 நாட்களுக்குள் திரும்ப பெறலாம். 60 நாட்களுக்கு பின்னர் குழந்தையை திரும்ப பெற முடியாது.
அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது, பிறக்கும் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தால் டாக்டர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். பின்னர் பிறக்கும் குழந்தையை நாங்கள் சென்று பெற்றுக் கொள்வோம். இதனை தொடர்ந்து குழந்தைகள் தத்துவள மையத்திடம் ஒப்படைக்கப்படும். குழந்தையை தத்து எடுக்க ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு முறைப்படி குழந்தை ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.