ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்ட ஒரே குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் இருப்பதை காணலாம் 
உள்ளூர் செய்திகள்

ஆதிச்சநல்லூரில் ஒரே குழியில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் ஒரே குழியில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு ‘சைட் மியூசியம்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது.

மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் மற்றும் சங்க கால மக்களின் வாழ்விடம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் ஒரே குழியில் 3 அடுக்குகளாக மொத்தம் 24 முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் மூன்று அடுக்குகளில் 2 அடி முதல் 5 அடி உயரம் வரையிலான முதுமக்கள் தாழிகள் அமைந்துள்ளன.

அவற்றில் மேலடுக்கில் அமைந்த சில முதுமக்கள் தாழிகள் சேதமடைந்து இருந்தன. மேலும், ஏராளமான மண்பாண்ட பொருட்களும் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-

ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் ஒரே குழியில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குழியின் மீது கண்ணாடி பேழை பதித்து, அவற்றின் மீது பொதுமக்கள் நின்று பழங்கால பொருட்களை காணும் வகையில், நவீன ‘சைட் மியூசியம்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டிடங்கள் ஆதிச்சநல்லூர், புளியங்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இங்கு பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். முன்பு ஆதிச்சநல்லூரில் இருந்து ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்ட பழங்கால பொருட்களும் மீண்டும் கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் வசதிக்காக டிஜிட்டல் நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.