இளம்பெண் தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

கேரளாவில் கன்னியர் மடத்தில் தங்கி கன்னியாஸ்திரிக்கு படித்து வந்த இளம்பெண் தற்கொலை

கேரளாவில் கன்னியர் மடத்தில் படித்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியில் கன்னியர் மடம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கன்னியாஸ்திரிகள் தங்கி உள்ளனர். மேலும் கன்னியாஸ்திரிக்கு  படித்து வரும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இதில் தொடுபுழா, வெள்ளியாமட்டம்  பகுதியை சேர்ந்த இளம்பெண் அனு அலெக்ஸ் (வயது 21) என்பவரும் கன்னியாஸ்திரிக்கு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை கன்னியர் மடத்தில் நடைபெற்ற வழிபாட்டுக்கு வரவில்லை. இதனால் மூத்த கன்னியாஸ்திரிகள் அனு அலெக்ஸ் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அறையில் அனு அலெக்ஸ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவர்கள் அனு அலெக்சை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கொத்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனு அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.