மரணம் 
உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே குளத்தில் மூழ்கி 2 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குளத்தில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 70).

இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமி குளத்துக்குள் தவறி விழுந்து தத்தளித்தார்.

இதை அவ்வழியாக சென்ற முத்துலட்சுமியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஜெயம் (55) என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் குளத்துக்குள் இறங்கி முத்துலட்சுமியை மீட்க முயன்றுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

குளத்தில் பெண்கள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.