வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பணி முடிந்து கடையில் மது விற்பனை மூலம் வசூலான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் காட்பாடி நோக்கி சென்றார்.
அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர். இதில் நிலைகுலைந்த அசோக்குமார் அடி தாங்காமல் கீழே விழுந்தார்.
அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அசோக் குமார் இது குறித்து டாஸ்மாக் அதிகாரி மற்றும் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவம் நடந்து இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவலம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.