லாரி மீது மோதியதில் அப்பளம்போல் நொறுங்கி கிடக்கும் கார் 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

தஞ்சை அருகே லாரி மீது காரி மோதிய விபத்தில் 2 பேர் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சை ஜெபமாலைபுரத்தை சேர்ந்தவர் விஜய் ( வயது 35 ). தஞ்சை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (22). இவர்கள் இருவரும் இன்று தஞ்சையில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டனர். காரை விஜய் ஓட்டினார்.

தஞ்சை அடுத்த வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது படுவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த விஜய், ஜெயராமன் ஆகிய 2 பேரும் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தஞ்சை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.