ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீதம் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் டன் கணக்கில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மற்றும் நாளை மறு நாள் கேரளாவில் ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரவில்லை. மேலும் விலை குறைந்தே காணப்பட்டது.
14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விலை கேட்கப்பட்டது. 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.15, பல்லாரி ரூ.25, பீட்ரூட் ரூ.4, வெண்டைக்காய் ரூ.10, சுரைக்காய் ரூ.2, பூசணிக்காய் ரூ.6, செடி முருங்கை ரூ.32, மர முருங்கை ரூ.18, மிளகாய் ரூ.28, தேங்காய் ரூ.25 என்ற விலையில் விற்பனையானது.
இதனால் உள்ளூர் விவசாயிகள் மட்டும் மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வியாபாரிகள் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 70 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து அதிக அளவில் காய்கறி ஏற்றுமதி இருக்கும். ஆனால் ஸ்டிரைக் என்பதால் வியாபாரிகள் வரவில்லை. இதனால் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற போராட்டங்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றோம் என்றனர். ஒட்டன்சத்திரத்தில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் தக்காளி மார்க்கெட்டும் வியாபாரிகள், விவசாயிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.