அவினாசி:
சேலத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்றது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து எம். நாதம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது 2 கார்களும் பக்கவாட்டில் மோதியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு காரில் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கினர். பின்னர் காரில் சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
போலீசார் காரில் வந்த 2பேரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த சின்னையன் மகன் சந்தோஷ் (வயது 31) மற்றும் கணேசன் மகன் பூபாலன் (23) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஹான்ஸ், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்கி விற்பனைக்காக கோவைக்கு காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து 2பேரையும் கைது செய்தனர். மேலும் 150 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.