தமிழகத்தில் 1980-81-ம் ஆண்டுமுதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி தொலைதூர கல்வி படிப்பில் சேர்ந்து விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதி உள்ளனர்.
இதில் பரீட்சை எழுதி முடித்தவர்களுக்கு ‘ரிசல்ட்’ வெளியிடப்பட்ட நிலையில் ‘சான்றிதழ்’ வழங்குவதற்காக சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு மாணவரின் செமஸ்டர் கட்டணம், தேர்வு கட்டணம், அவர்களது பெயர், விவரம், பிறந்த தேதி, ஊர் ஆகியவற்றை பல்கலைக்கழக அதிகாரிகள் சரிபார்க்க தொடங்கினார்கள்.
அப்போது தொலைதூர கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடை பெற்ற ‘ஆன்லைன்’ தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தொலைதூர கல்வி படிப்பில் சேராமல், ஆன்லைன் தேர்வில் எத்தனை பேர் முறைகேடாக தேர்வு எழுதி உள்ளனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 117 பேர் பி.காம்., பி.பி.ஏ., படிப்புக்கு பட்டம் பெற முறைகேடாக ஆன்லைன் தேர்வு எழுதியது தெரியவந்தது.
வெளியில் தொலைதூர கல்வி மையங்களை நடத்துபவர்கள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பெற்றுத்தர முயற்சித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி கூறுகையில், ‘தொலைதூர கல்வி படிப்பில் சேர்ந்து பரீட்சை எழுதுபவர்களின் விவரங்களை சான்றிதழ் வழங்கும் முன்பு மீண்டும் ஒருமுறை சரிபார்த்து அதன் பிறகே பட்டம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி சரிபார்க்கும் போதுதான் பி.காம்., பி.பி.ஏ., படிப்புக்கு விண்ணப்பிக்காத பல பேர் ஆன்லைனில் பரீட்சை எழுதியது தெரிய வந்தது. சரியான நேரத்தில் இவற்றை கண்டுபிடித்ததால் யார்-யார் இந்த முறைகேட்டுக்கு துணைபோய் உள்ளனர் என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடியாக சான்றிதழ் பெறும் சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தினாலும் இதன் பின்னணியில் எவ்வளவு பேர் செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைனில் தேர்வு எழுதிய 117 மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் தனித்தனியாக இப்போது விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் கலைஞர் உணவகம் 500 இடங்களில் திறக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்