உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகர் யு.எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 43), காங்கிரஸ் பிரமுகரான இவர் அங்கு அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் கோவையில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நவீன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ், தங்க காசு, வளையல் உள்ளிட்ட பல்வேறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நவீன் இது குறித்து உடனடியாக உடுமலை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டி.எஸ்.பி. தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் கண்ணா, சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது வீட்டு மாடியின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் மாடி வழியாக சென்று ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து மோப்ப பிடித்தவாறு சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களின் அடையாளத்தை காண அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங்சாய் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.