மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் (கோப்பு படம்) 
உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு கொண்டாட கடற்கரைகளுக்கு போக முடியாது... தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் வருகிற 15-ந் தேதியுடன் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும்  ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 

இதையும் படியுங்கள்... சென்னை கட்டமைப்புகளை உலகத் தரத்தில் மாற்ற திட்டம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்